IPL கோப்பை மட்டும்தான் கோலிக்கான அளவுகோலா – சிந்தியுங்கள் புரியும்..!

IPL கோப்பை மட்டும்தான் கோலிக்கான அளவுகோலா – சிந்தியுங்கள் புரியும்..!

கிரிக்கெட் விளையாட்டில் வீரர்கள் பலபேர் வரலாம் ஆனால் அதில் சிலர்தான் சாம்பியன் ஆகிறார்கள். சாம்பியனுக்காக அளவுகோல் என்பது இரசிகர்கள் மனதில் அவர்கள் விதைக்கும் நம்பிக்கையும், நம்பிக்கை உருவாக காரணமாக இருக்கும் அவர்களின் அசராத போராட்டக் குணமும்தான்!

சச்சினுக்குப் பிறகு சமகாலத்தில் இந்திய அணியில் அப்படி நான் பார்த்த இரு சாம்பியன் வீரர்கள்; ஒருவர் மகேந்திர சிங் தோனி; இன்னொருவர் விராட் கோலி.

“நாங்கள் ரன்கள் அடிப்போம். தோனிக்கு எப்படி ஜெயிக்க வேண்டுமென்று தெரியும்” – இதைச் சொன்னது இந்திய அணியின் பயமற்ற பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்.

என் வாழ்க்கையின் ஒருகட்டத்தில் கிரிக்கெட்டை நான் செய்தித்தாளில் படித்துதான் முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடிந்த சூழலில் இருந்தேன். அப்பொழுது இந்திய அணி விளையாடிய போட்டிகளைப் பற்றிச் செய்தித்தாளில் பார்த்தால், பெரும்பாலும் வெற்றி செய்திகள்தான் இருக்கும்.

அதற்குப் பிறகு தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்க நேரம் கிடைத்த காலங்களில் எல்லாம், இந்திய அணியின் வெற்றிக்குறித்த எந்தச் சந்தேகமோ, அழுத்தமோ மனதில் எழாது. அப்படியே இந்திய அணி தோற்றாலும், அடுத்த ஆட்டத்தில் வென்றுவிடுவார்கள் கோப்பை உறுதி என்கிற நம்பிக்கைதான் இருக்கும்.

சச்சின் காலத்தில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு, சீராக வெற்றிகள் வர ஆரம்பித்த தோனியின் காலம் என்பது ஒரு பொற்காலம். வெற்றிக்குறித்த உறுதி ஏதுமில்லாமல், பைனலில் தோற்பதை வாடிக்கையாகக் கொண்ட அணிக்கு இரசிகராக இருந்து, டிவிக்கார அக்கா எந்த நேரத்தில் துரத்திவிடும் என்கிற பதைபதைப்போடு, அணி வெல்லுமா என்ற அழுத்தத்தையும் சுமந்துகொண்டு, சச்சினையும் சுமந்துகொண்டு, ஒரு ஆட்டத்தை முழுமையாகத் தொலைக்காட்சியில் பார்ப்பதே சாதனை என்றிருந்தவனுக்கு, தோனி ஒரு மிகப்பெரிய தேவதூதன்!

2011 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு ஒரு அரை கிலோமீட்டர் சாலையில் கத்திக்கொண்டு ஓடிய என் கிறுக்குத்தனமான கொண்டாட்டத்திற்குப் பின்னே இருந்தது, கிரிக்கெட் குறித்தான காதல் மட்டுமல்ல, அதுவொரு நீண்ட நாள் ஏக்கம், கனவு. அதற்குப் பின்னால் வாழ்க்கையில் கண்ட தனிப்பட்ட அவமானங்களுமே இருந்தது.

 

அந்த நாள் எல்லாவற்றையும் வென்று எல்லோருக்கும் பதில் சொல்லியது போன்ற ஒரு உணர்வு. அன்று அப்படி ஓடியவனின் கால்களுக்குத்தான் இளைஞனின் வயது ஆனால் இதயத்திற்கு சிறுவனின் வயதுதான். அவன் அன்று அந்தச் சாலையில், தொலைக்காட்சியை பாதியில் அணைத்து விரட்டிய ஒரு அக்காவிற்கும் கூட கெக்கலிப்பு காட்டியபடிதான் ஓடிக்கொண்டிருந்தான்.

இந்த உணர்வை முழுமையாக உணர்ந்து என் போன்றோரின் இடத்திலிருந்து யோசித்துப் பாருங்கள். மகேந்திர சிங் தோனி ஏன் சாம்பியன் வீரன் என்று புரியும். சச்சினுக்குப் பிறகு இந்தியாவின் குக்கிராமங்கள் ஊடுருவிய ஒரு விளையாட்டு வீரனின் பெயர் என்றால் அது மகேந்திர சிங் தோனியுடைய பெயர்தான்!

இதேபோல்தான் இவரைப்போல்தான் விராட் கோலியும் ஒரு சாம்பியன் வீரன். சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து உழைத்துச் சம்பாதித்து கொஞ்சம் உயர்ந்து, தன் சொந்த வீட்டில் சோபாவில் அமர்ந்து யோசிக்கும் பொழுது அப்படியே ஒரு பாதுகாப்பான உணர்வோடு ஒரு நிம்மதி பரவும் இல்லையா?! அப்படியொரு நிம்மதியை கிரிக்கெட் பார்க்கும்போது தன் பேட்டிங் திறமையால், அசராத போராட்டக் குணத்தால் தந்தவன் விராட்கோலி. மகேந்திர சிங் தோனி வெற்றியைக் கத்தி சொல்ல வைத்தார் என்றால், விராட் கோலி வெற்றி பெறுவது எங்களின் வாடிக்கை என்று கொஞ்சம் திமிராகச் சொல்ல வைத்தவர்.

இந்தத் தத்துப்பித்துக் கட்டுரை எதற்காக என்றால், நேற்று ஐ.பி.எல் முடிந்திருக்கிறது, புதிய அணியின் ஹர்திக் பாண்ட்யா கூட ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறார். ஆனால் பதினைந்து ஆண்டுகளாக ஐ.பி.எல் கோப்பை விராட் கோலிக்கு வசப்படாமல் இருக்கிறது. ஆனால் விராட் கோலி இதற்காக எங்காவது மனதின் ஒரு ஓரத்தில் வருந்துவார் என்றால் அது அவசியமற்றது. இந்தக் கோப்பைகளை எல்லாம் தாண்டியது அவர் உருவாக்கி இருக்கும் நம்பிக்கையும், அதற்காக அவர் கொடுத்த உழைப்பும், சாதனைகளும்.

இந்தக் கட்டுரை எல்லாம் அவர் கண்ணில் படாது, ஆனால் ஒன்று சொல்லத் தோன்றுகிறது “என் போன்றவர்களின் மூளை ஞாபக அடுக்குகளில் கிரிக்கெட் தொடர்பான பல நல்ல நினைவுகளையும், நம்பிக்கையையும் விதைத்திருக்கும் நீங்கள் ஒரு சாம்பியன். நீங்கள் பலருக்கு முன்மாதிரி. நீங்கள் ஆட்ட வெற்றி, கோப்பைகளைத் தாண்டிய, ஒரு குறிப்பிட்ட காலத்தில் கிரிக்கெட் உலகை முழுமையாய் கொள்ளையடித்த ஒரு வெற்றிக்கரமான கொள்ளைக்காரர். நீங்கள் ஒரு புது விதி. நீங்கள் ஒரு புது பாதை. நீங்கள் கிரிக்கெட். எப்போதும் மகிழ்ந்திருங்கள் விராட்” என்பதுதான்!

இதெல்லாம் ஒரு நன்றி செலுத்தலில் சேர்ந்தது!

#Richards