IPL and Leadership
ஐபிஎல்லில், எல்லா கிரிக்கெட் கேப்டன்களுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும்.
தோனியுடையது பெரும்பாலும் அமைதியும், அதிகாரமும் ஒன்றாக கலந்த முறை. தன்னுடைய வேவ் லெந்த்துக்கு ஏற்ற ஆளாக இருக்க வேண்டும். திறமை குறைவாக இருந்தாலும் ஓகே, ஆனா தான் சொல்வதை, ஃபாலோ செய்ய வேண்டும். மோகித் சர்மா, ஜோகிந்தர் சர்மா என்று, பார்க்கும் போது ரொம்ப நார்மலாக தெரியும் பந்து வீச்சைக் கொண்டே, வெற்றிகளை அடைந்தது அந்த விதத்தில்தான்.
அந்த வீரர்களுக்கு, கொஞ்சம் கூடுதல் திறமையும், புத்திசாலிகளுமாக இருந்தால், அப்படியே மேலே சென்று விடுவார்கள். அஸ்வின், ஷர்துல் தாக்கூர், கெய்க்வாட் போன்றோர் அப்படி கிடைத்த வாய்ப்பில், திறமையைக் காட்டியவர்கள். அவர்கள், எந்த அணியில் இருந்தாலும் முன்னேறியிருப்பார்கள்!
ஆனால், இந்த முறையில் இயங்க, தலைமை மிக திறமையான, தன்னம்பிக்கை கொண்ட, ஆழந்த அறிவு கொண்டவராக இருக்க வேண்டும். தலைமையின், தன்னம்பிக்கை குறைந்தாலோ, குழம்பினாலோ கூட, எவ்வளவு பெரிய வீரர்கள் இருந்தாலும், அணிக்கு வெற்றி கிட்டாது.
ரோகித்துடையது, அதிக ஆர்ப்பாட்டமில்லாத கேப்டன்சி. டீம் பில்டிங்கும், வீரர்களை மோடிவேட் செய்வது, அவர்களுடைய திறமையை வெளிக் கொணர்வது என்று ஒரு லாங்க் டெர்ம் ப்ராசஸ். உடனடி வெற்றி கிட்டாமல் போகலாம். ஆனால், அதன் முடிவு, அவர்களை மிகச் சிறந்த வீரராக மாற்றியிருக்கும். ஹர்திக், பும்ரா, சூர்யகுமார் யாதவ், இசான், குர்னால், ராகுல் என்று பலர் அதற்கு சாட்சி. மற்ற அணிகளில் சோபிக்காத சவ்ரப் திவாரி, மும்பைக்கு சிறப்பாக ஆடுவதும், மிக வெளிப்படை.
ஆனால் இதில் ரோகித்துக்கு மேனேஜ்மெண்ட் துணையாக நின்றது. பும்ராவுக்கு, மலிங்காவின் ஆலோசனைகள் கிடைத்தது. ஹர்திக் பாண்டியாவிற்க்கு பொலார்டின் சப்போர்ட் கிடைத்தது. இசான் கிசான், ஃபார்ம் அவுட்டில் இருந்த போது, ஃபார்முக்கு வரும் வரை, ரோகித் அதிரடி ஆடியது போல், ஒவ்வொரு வீரருக்கும், மற்றவர்கள் உறுதுணையாய் இருந்தனர். இந்த காம்போ அமையாவிட்டால், இந்த மெத்தேட் பெரும் சொதப்பலாகவும் மாறலாம்.
விராத் கோலியுடையது, கொஞ்சம் கார்ப்பரேட் வழிமுறை. உனக்கு திறமை இருக்கிறதுனாலதான் இங்க இருக்க. ரொம்பல்லாம் க்ரூம் பண்ண முடியாது. கொடுக்கும் வாய்ப்புல, உன்னை நீயே ப்ரூவ் பண்ணா, உனக்கான வெற்றியை நீ தேடிக்கலாம். இந்தப் பாதைல, பல சவால்கள் இருக்கும், அதையும் தாண்டி நின்னுட்டீன்னா, உன் வெற்றி மிகப் பெரியதா இருக்கும் வகை.
பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றுவது, ஒரு சீசன் விளையாடாவிட்டாலே, உடனடியாக வெளியே அனுப்பவது என்பதெல்லாம் அந்த சவாலின் வெளிப்பாடுதான்.
எப்படிக் கார்ப்பரேட்டுகளில், கொஞ்சம் ஆட்டிட்டியுட் காட்டக் கூடிய, ஆர்ப்பாட்டம் இருக்கக் கூடியவர்கள் கூடுதல் கவனம் பெறுவார்களோ, அது போல, இங்கும் ஸ்டார் அந்தஸ்திற்க்கு கொஞ்சம் முன்னுரிமை உண்டு! ஒவ்வொரு வருடமும் செலவுகளுக்கு அஞ்சாமல், பெரும் தொகை செலவு செய்து, ஸ்டார் ப்ளேயர்களைக் கோண்டு வருவதும், அடுத்த வருடமே அவர்களை அனுப்புவதும் என்று இருப்பதும் இந்த முறையில்தான்.
ஆனால், இங்கும் நிலைத்து நிற்பவர்கள், உள்ளார்ந்த திறமை வாய்ந்த, அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத, அடிப்படையில் அதிக கவனம் செலுத்தும் வீரர்கள்தான். வாஷிங்டன் சுந்தர், சஹால், சிராஜ், ஷைனி, படிக்கல் , ஹர்ஷல் பட்டேல் எல்லாம் இந்த வகைதான். அவர்களுக்கான வாய்ப்பை, ஆர்சிபி தான் வழங்கியது என்றாலும், ஓரளவு க்ரூம் செய்தது என்றாலும், மும்பை போன்ற டெவலப்மெண்ட் என்று சொல்லி விட முடியாது.
ஆனால், இந்த முறையின் பிரச்சினை, இந்த தொடர் பிரஷர்களும், மிக முக்கியமாக இந்த ஆட்டிட்யுடும், ஒன்று கடுப்பேத்தும் அல்லது அவர்கள் தன்னம்பிக்கையில் அடி விழவைக்கும். டிவில்லியர்ஸ், சிறிது காலம் கெயில் என்று சிலரைத் தாண்டி, நீண்ட காலம் இந்த அணிக்காக எந்த ஸ்டார் ப்ளேயர்களும் ஆடாமல் இருப்பது, இந்தக் காரணம்தான்.
இப்போதும் 3 வது இடத்தில் ரஜத் படிதார், சுந்தர், ஷபாஸ் அகமது, பரத், டேன் கிரிஸ்டியன் என்று மாறி மாறி முயற்சிப்பதும், மிடில் ஆர்டரில் ஆளில்லாமல் இருப்பதும் இந்த வழிமுறையால்தான்.
அதே சமயம், இந்த முறையில் தாண்டி நிற்கக் கூடியவர்கள், தனிப்பட்ட முறையிலேயே மேட்ச் வின்னர்களாக மாறி விடுவர். கோலி, டிவில்லியர்ஸ், படிக்கல், மேக்ஸ்வெல், சஹால், ஹர்சல் பட்டேல் என்று எல்லார் கவனத்திலும் படுவார்கள்.
இந்த மூன்று வகை லீடர்ஷிபபையும் சவால் விடும் தொடராக இந்த ஐபிஎல் அமைந்திருக்கிறது. வழக்கமாக, ஏதாவது ஒரு அணி, அசைக்க முடியாத இடத்தில் இருக்கும்.
ஆனால் இந்த முறை, தோனியின் ஆட்டம் தொடர்ந்து சொதப்புகிறது. சென்னை ராஜஸ்தானுடன் கூட தோற்கிறது. ரோகித்தும் முழுமையான ஃபார்மில் இல்லை. முக்கிய வீரர்கள் ஃபார்மில் இல்லை. இன்னும் ப்ளே ஆஃபுக்கே தகுதி பெறவில்லை, தகுதி பெறுமா என்பதும் சந்தேகமாய் இருக்கிறது. பெங்களூரோ, 140 ரன்களை எடுக்க முடியாமல், கடைசியில் இருக்கும் சன் ரைசர்சிடம் தோற்கிறது.
கோப்பையை யார் வெல்வார்கள் என்ற கேள்வியினூடே, இந்த அப்ரோச், மெத்தெட்களும் மிகவும் சுவாரசியமாகவே இருக்கிறது!.
#NareshKumar