IPL ஏலம்- சிறப்பு பார்வை…! (முழுமையான விபரங்கள்)

IPL ஏலம்- சிறப்பு பார்வை…!

IPL 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்றது.இதில் 292 வீரர்கள் ஏலம் விடப்பட்டார்கள்.

மொத்தம் 1114 வீரர்கள் ஏலத்துக்கு விருப்பம் வெளியிட்டு தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்ததில், அணி உரிமையாளர்களின் விருப்பங்களுக்கு அமைய 292 பேர் IPL ஏலத்துக்கான குறும் பட்டியலில் (Short List) இடம் பிடித்தனர்.

8 அணிகள் இடையிலான 14-வது IPL. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு அணி நிர்வாகமும் வீரர்களை வாங்க மொத்தம் ரூ.85 கோடி செலவு செய்யலாம். இதில் ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்குரிய சம்பளம் போக மீதி தொகையை கொண்டு இந்த ஏலத்தில் வீரர்களை வாங்க முடியும்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் ஒருவர் வெளிநாட்டு வீரர், கைவசம் 19.90 கோடி ரூபாய் வைத்திருந்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வீரர்களை எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 13.4 கோடி ரூபாய் வைத்திருந்தது

பஞ்சாப் கிங்ஸ் 9 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 5 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 53.20 கோடி ரூபாய் வைத்திருந்தது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 2 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். 10.75 கோடி ரூபாய் கைவசம் வைத்திருந்தது.

மும்பை இந்தியன்ஸ் 7 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 4 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 15.35 கோடி ரூபாய் வைத்திருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் 9 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 37.85 கோடி ரூபாய் வைத்திருந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 35.40 கோடி ரூபாய் வைத்திருந்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் ஒரு வெளிநாட்டு வீரர் அடங்குவார். கைவசம் 10.75 கோடி ரூபாய் வைத்திருந்தது.

ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 22 பேரும் அதிகபட்சமாக 25 வீரர்களையும் சேர்த்துக் கொள்ள முடியும். அதன் அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு அணியும் வெற்றிடமான இடங்களை முழுமையாக நிரப்பினால் மொத்தம் 61 வீரர்கள் இன்றைய ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலை ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் காணப்பட்டது.

இலங்கை வீரர்கள் 31 பேர் பதிவு செய்திருந்தாலும் 9 வீரர்களே இறுதி பட்டியலில் இடம்பிடித்திருந்தனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தும் இதிலே ஒருவர் என்பதால் எல்லோரது கவனமும் இந்த ஏலம் தொடர்பில் இருந்தது.

சரியாக 3 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் விருந்தாகும் ஒன்றில் ஏலம் ஆரம்பமானது.

இதிலே 8 அணிகளும் மொத்தம் 145 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிட்டு மொத்தம் 57 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டார்கள். இதில் 22 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர்.

இவர்களில் தென்ஆப்பிரிக்காவின் சகலதுறை வீரர் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

IPL வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் எனும் வரலாற்று சாதனையும் இவருக்கு சொந்தமானது, முன்னர் 16 கோடிக்கு RCB அணியால் 2015 ல் யுவராஜ் வாங்கப்பட்டமையே முன்னைய சாதனையாகும்.

அதைவிடவும் கடந்தாண்டில் கொல்கொத்தா அணியால் அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் 15.5 கோடிக்கு வாங்கப்பட்ட சாதனையையும் மோரிஸ் முறியடித்தார்.

நியூசிலாந்தின் சகலதுறை வீரர் கைல் ஜேமிசன் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது.
அடுத்து மேக்ஸ்வெல் 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரையும் RCB அணியே வாங்கியது. சென்னை அணி மேக்ஸ்வெல்லை எடுக்க கடுமையான போட்டி இட்டமை கவனிக்கத்தக்கது.

அதேநேரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியாவின் ஜய் ரிச்சர்ட்சன் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. அவுஸ்திரேலியாவின் பிக் பாஸ் லீக் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் இவராவார்.

இந்தியாவின் டெஸ்ட் ஆட்டக்காரரான புஜாராவை 50 லட்சம் அடிப்படை விலையில் சென்னை அணி வாங்கியுள்ளது.7 ஆண்டுகளுக்கு பின்னர் IPL போட்டிகளுக்கு வருகிறார் புஜாரா. அதேநேரம் சச்சின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி 20 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.
இவை இரண்டும் சிறப்பான நிகழ்வாக இம்முறை ஏலத்தில் அமைந்தன.

சர்வதேச போட்டிகளில் விளையாடியிராத வீரர்கள் இருவர் IPL ஏலத்தில் கவனத்தை ஈர்த்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானை 5.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது.

மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய்க்கும், ஷாகிப் அல் ஹசனை கொல்கத்தா அணி 3.20 கோடி ரூபாய்க்கும், தாவித் மலனை 1.5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஷிவம் துபேவை 4.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலம் எடுத்தம்மை கவனிக்கத்தக்கது.