IPL க்கு வரும் புதிய சிக்கல்- மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடம் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் BCCI…!

இந்தியாவில் இடம்பெற்ற 14வது ஐபிஎல் தொடரின் மீதமான போட்டிகள் கொரோனா காரணமாக முன்னதாக கடந்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

29 போட்டிகள் நடைபெற்றபோதும் 31 ஆட்டங்கள் மீதமாக இடம்பெற இருக்கின்ற நிலையில், இந்த போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதில் இந்திய கிரிக்கெட் சபை பாரிய சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது.

நேற்றைய நாளிலேயே மீதமான IPL போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்(UAE) செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

 

இதன் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் சபைக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்திருக்கிறது.

மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் போட்டிகளின் ஒருசில ஆட்டங்களை அல்லது 50 வீதமானவற்றை தவறவிடும் சிக்கல் நிலைமை உருவாகிறது.

குறிப்பாக மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறுகின்ற கரீபியன் பிரீமியர் லீக்(CPL) போட்டிகள் ஆகஸ்ட்  28 திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 19 வரை இடம் பெறப்போகிறது.

அதே காலப்பகுதியில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 18 ஆரம்பமாகி ஒக்டோபர் 10 ஆம் திகதி வரைக்கும் அதிகமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை) இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் அட்டவணையை கொஞ்சம் சீர் செய்வதற்கான முயற்சிகளில் இந்திய கிரிக்கெட் சபை ஈடுபட்டிருக்கிறது.

Bubble to Bubble  எனும் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் CPL போட்டித் தொடரை முடித்துக்கொண்டு ,நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று, வெறுமனே மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் போட்டிகளில் விளையாட வைப்பதற்கான முயற்சிகளையும் இந்திய கிரிக்கெட் சபை எடுத்திருக்கிறது.

 

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை முனைப்பு காட்டி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.