KKR-ஐ கை கழுவும் ரிங்கு சிங்? ஐபிஎல் கப் வாசனையே தெரியாத அணிக்கு செல்ல ஆசை.. கடுப்பான ரசிகர்கள்

KKR-ஐ கை கழுவும் ரிங்கு சிங்? ஐபிஎல் கப் வாசனையே தெரியாத அணிக்கு செல்ல ஆசை.. கடுப்பான ரசிகர்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங், ஒருவேளை தான் வேறு ஐபிஎல் அணிக்கு செல்ல விரும்பினால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தான் செல்ல விரும்புவேன் என கூறி இருக்கிறார். இதை அடுத்து கொல்கத்தா அணியின் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன் எந்த ஒரு அணியும் நான்கு அல்லது ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும். மற்ற வீரர்களை அணியை விட்டு நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டால், எந்த அணிக்கு செல்வீர்கள் என கேட்டதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கூறி இருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வளர்க்கப்பட்ட ரிங்கு சிங், இதுவரை அந்த அணிக்கு விசுவாசமாக இருந்துள்ளார். 2022 ஏலத்தின் போது ரிங்கு சிங்கை 55 லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியது கொல்கத்தா அணி. அதற்கு முன் அவர் அதே அணியில் கூடுதல் சம்பளத்துடன் இருந்தார். குறைந்த சம்பளம் அளித்தாலும் தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தது கொல்கத்தா அணி தான் என்பதை அவர் பலமுறை கூறி இருக்கிறார்.

கொல்கத்தா அணியில் ரிங்கு சிங்கை காட்டிலும் காட்டிலும் பல முக்கிய வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை அந்த அணி தக்க வைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ரிங்கு சிங்கை அந்த அணி விடுவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் ஒரு பேட்டியில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு செல்ல விரும்புவதாக கூறி இருக்கிறார் ரிங்கு சிங். இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பை வெல்லாத பெங்களூரு அணிக்கு அவர் செல்ல விரும்பியது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. ரிங்கு சிங், விராட் கோலியின் தீவிர ரசிகர் ஆவார். அவரது பேட்டைத் தான் அவர் போட்டிகளில் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் ஃபினிஷருக்கான இடம் காலியாக உள்ளது. தினேஷ் கார்த்திக் 2024 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்றுவிட்டார். அவரது இடத்தை நிரப்ப சரியான ஒரு ஃபினிஷர் தேவை. அதற்கு ரிங்கு சிங் பொருத்தமாக இருப்பார். அவருக்கு விராட் கோலியின் ஆதரவும் இருப்பதால், ஆர்சிபி அணி ரிங்கு சிங்கை ஏலத்தில் வாங்கவும் வாய்ப்பு உள்ளது.