Marnus Labuschagne ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்; யார் இந்த ஆஸி சூப்பர் ஸ்டார் ?
பேட்டர்களுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறார் மார்னஸ் லாபுஷான். ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற சூப்பர் ஸ்டார்கள் அமர்ந்திருந்த அரியணையில் ஏறியிருக்கிறார் அவர். அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலை பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா. இதன் 3 இன்னிங்ஸ்களில் 1 சதம், 2 அரைசதம் என அடித்து நொறுக்கியிறுக்கிறார் லாபுஷான். இரண்டாவது போட்டியில் ஆட்ட நாயகன் விருது இவருக்குத்தான் கிடைத்தது. இந்தப் போட்டியில் மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே டெஸ்ட் ஃபார்மட்டில் ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருக்கிறார். அதனால், இப்போது டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறார்!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பிராட்மேனுக்கு அடுத்த படியாக அதிக சராசரி வைத்திருப்பவர் இவர்தான் என்பதை நம்ப முடிகிறதா! அந்த அளவுக்கு அமர்க்களப்படுத்தும் இவர் யார்? முதல் 8 இன்னிங்ஸ்களில் சொதப்பிய இவரால் எப்படி மீண்டு வர முடிந்தது.
முதலிடம் பிடித்திருக்கும் லாபுஷான் இதுவரை விளையாடியிருப்பது வெறும் இருபதே டெஸ்ட் போட்டிகள். நேற்று வரை முதலிடத்திலிருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் மார்னஸ். 912 புள்ளிகள் பெற்றிருக்கும் அவருக்கும் ரூட்டுக்கும் இடையே 15 புள்ளிகள் வித்யாசம் உருவாகியுள்ளது. ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா ஐந்தாவது இடத்திலும், கோலி ஏழாவது இடத்திலும் நீடிக்கின்றனர். டேவிட் வார்னர் ஆறாவது இடம் பிடித்திருக்கிறார்.
பௌலர்களுக்கான தரவரிசையில் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். அஷ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையிலும் இரண்டாவது இடத்திலிருக்கிறார் அஷ்வின்
#Abdh