Mr.IPL: சேப்பாக்கம் முதல் சென்சூரியன் வரை… ரெய்னாவின் வெறியான 5 இன்னிங்ஸ்கள்!

Mr.IPL: சேப்பாக்கம் முதல் சென்சூரியன் வரை… ரெய்னாவின் வெறியான 5 இன்னிங்ஸ்கள்!

சேப்பாக்கம் முதல் சென்சூரியன் வரை வியர்வை சொட்ட சொட்ட ஸ்லீவைத் தூக்கிவிட்டு ரெய்னா அடித்த இன்சைட் அவுட் ஷாட்களும், மிட் விக்கெட்டில் பறக்கவிட்ட சிக்சர்களும் எவர்க்ரீனாக எப்போதுமே நினைவில் நிற்கும். தேங்க் யூ சின்ன தல!

Mr.IPL, சின்ன தல என ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் கரியர் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. சென்னை அணியுமே கூட கைவிரித்துவிட்டது. ஒரு மாபெரும் சகாப்தமே கண்முன் சரிந்ததை போல இருக்கிறது. ஆனாலும் இத்தனை ஆண்டுகளாக சென்னை அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. அதை கொண்டாடும் வகையில் சென்னை அணிக்காக ரெய்னா ஆடிய டாப் 5 இன்னிங்ஸ்கள் இங்கே…

87(25) Vs பஞ்சாப்

டி20 போட்டிகளில் ரெய்னா எவ்வளவு அபாயகரமான வீரர் என்பதற்கு இந்த ஒரு இன்னிங்ஸே சான்றாக அமையும். அதிகபட்சமாக ரெய்னா அரைமணி நேரம் கூட க்ரீஸில் நின்றிருக்கவில்லை. ஆனால், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. 2014 சீசனில் ப்ளே ஆஃப்ஸில் பஞ்சாபுக்கு எதிரான போட்டி அது. முதலில் பஞ்சாப் பேட்டிங் செய்து சேவாக்கின் அதிரடியால் 226 ரன்களை எடுத்திருக்கும். சென்னைக்கு இமாலய டார்கெட் நிர்ணயிக்கப்பட்டது. வெல்வது கடினம் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், ரெய்னா அப்படி நினைக்கவில்லை. வெறியோடு ஆடினார். எதிர்கொண்டது 25 பந்துகள்தான், ஆனால் 87 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் 350 ஐ நெருங்கியது. 12 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெறியாட்டம் ஆடியிருப்பார். 87 ரன்களில் ரன் அவுட்தான் ஆகியிருந்தார். தொடர்ந்து ஆடியிருக்கும்பட்சத்தில் 15 ஓவருக்குள் டார்கெட்டை சேஸ் செய்து புதிய வரலாறே படைத்திருப்பார்.

73(38) Vs கொல்கத்தா

இப்போது வரைக்குமே நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஒருவராக ரெய்னாவும் இருக்கிறார். ப்ளே ஆஃப்ஸிலும் இறுதிப்போட்டியிலும் வழக்கத்தை விட கூடுதல் எனர்ஜியோடு வியர்வை சொட்ட சொட்ட ரெய்னா ஆடுவார். 2010, 2011 ஆகிய ஐ.பி.எல் சீசன்களை சென்னை வென்றிருந்த நிலையில் ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் முனைப்போடு 2012 இறுதிப்போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிராக மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்து 190+ ஸ்கோரை எடுத்தது. அவ்வளவு பெரிய ஸ்கோரை எடுக்க மிக முக்கிய காரணமாக இருந்தது ரெய்னாவே. வெறும் 38 பந்துகளில் 73 ரன்களை எடுத்திருப்பார். ஸ்ட்ரைக் ரேட் 190+. ப்ரெட் லீ, காலீஸ், நரைன் என வலுவான பந்துவீச்சை கொண்ட கொல்கத்தாவை நாலாபக்கமும் சிதறடித்திருப்பார். அந்தப் போட்டியில் சென்னை தோற்றிருந்தாலும் இந்த இன்னிங்ஸிற்கு எப்போதும் சிறப்பானதொரு இடம் உண்டு.

100(53)* Vs பஞ்சாப்

இதுவும் பஞ்சாபுக்கு எதிரான ஒரு இன்னிங்ஸே. இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் முதல் சதத்தை அடித்த வீரர் எனும் பெருமையை பெற்றவர் ரெய்னா. அவர் சென்னை அணிக்காக அடித்திருக்கும் ஒரே சதமும் இதுதான். 2013 ஐ.பி.எல் சீசனில் நடந்த இந்தப் போட்டியில் பஞ்சாபுக்கு எதிராக 53 பந்துகளில் சதமடித்து நாட் அவுட்டாகவும் இருந்து அசத்தியிருப்பார். 27-2 என்ற நிலையில் சென்னை தடுமாறிக்கொண்டிருந்த போது இப்படியொரு பொறுப்பான இன்னிங்ஸை ஆடி சென்னையை தூக்கி நிறுத்தியிருப்பார்.

57(35) Vs மும்பை இந்தியன்ஸ்

2010-ல் சென்னை அணி முதல்முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றிருந்தது. அந்த சீசனின் இறுதிப்போட்டியில் சென்னை மும்பையுடன் மோதியிருக்கும். அந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றவர் சுரேஷ் ரெய்னா. 35 பந்துகளில் 57 ரன்களை எடுத்திருப்பார். தோனியோடு சேர்ந்து 72 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். சென்னை அணி போட்டியளிக்கும் வகையில் 160+ ஸ்கோரை எடுத்ததற்கு ரெய்னாவின் அரைசதமே மிக முக்கிய காரணமாக இருந்தது. நாக் அவுட்களில் ரெய்னா பல தரமான இன்னிங்ஸ்களை ஆடியிருந்தாலும், இந்த இன்னிங்ஸ் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக மட்டுமல்லாமல் சென்னை அணிக்கு முதல் முறையாக ஐ.பி.எல் சாம்பியன்ஸ் என்கிற பட்டத்தை பெற்றுக்கொடுத்த இன்னிங்ஸ் என்பதால் கூடுதல் சிறப்பானது.

98(55) Vs ராஜஸ்தான்

2009 டி20 போட்டிகளில் ரெய்னா உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த காலகட்டம். இந்திய அணியின் டி20 சென்சேஷனாகவும் கலக்கிக்கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் 2009 ஐ.பி.எல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றிருந்தன. அங்கே சென்சூரியனில் நடந்த ஒரு போட்டியில் ரெய்னா வெளுத்தெடுத்திருந்தார். ராஜஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டியில் 55 பந்துகளில் 98 ரன்களை அடித்திருந்தார். முதல் சதத்தை அடிக்கும் வாய்ப்பு இரண்டே ரன்களில் பறிபோயிருந்தது. ஆனால், ஒரு சிறப்பான இன்னிங்ஸ் அது. சென்னையே 164 ரன்களைத்தான் அடித்திருக்கும். அதில் 98 ரன்களை ரெய்னா மட்டுமே அடித்திருந்தார். சென்னை அந்தப் போட்டியைச் சுலபமாக வென்றிருக்கவும் செய்தது.

Abdh