NSL தொடரில் சதமடித்து அசத்திய குசல், ஓஷத, கமிந்து

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (01) நிறைவுக்கு வந்தது.

 

இதில் யாழ்ப்பாண அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு அணிக்காக குசல் மெண்டிஸும், காலி அணிக்கு எதிரான போட்டியில் கண்டி அணியின் ஓஷத பெர்னாண்டோவும், கமிந்து மெண்டிஸும் சதங்களைக் குவித்து பிரகாசித்திருந்தனர்.

 

அதேபோன்று, லஹிரு உதார கண்டி அணிக்காகவும், சமிந்த பெர்னாண்டோ யாழ்ப்பாண அணிக்காகவும் அமைரச்சதம் அடித்து வலுச்சேர்த்தனர்.

 

இதனிடையே, கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் யாழ்ப்பாண அணியின் தனன்ஞய டி சில்வா 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், கொழும்பு அணியின் 22 வயதான இளம் வீரர் கவிக டில்ஷான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிரட்டியிருந்தனர்.

 

கொழும்பு எதிர் யாழ்ப்பாணம்

 

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று 224 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கொழும்பு அணி, 110.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 272 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

 

அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் பலம் சேர்த்த குசல் மெண்டிஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 114 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இம்முறை தேசிய சுபர் லீக்கில் அவரது முதல் சதம் இதுவாகும்.

 

யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட தனன்ஞய டி சில்வா 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்த, திலும் சுதீர மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

 

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாண அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 70 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது.

 

யாழ்ப்பாண அணியின் துடுப்பாட்டத்தில் சமிந்த பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, கொழும்பு அணியின் பந்துவீச்சில் கவிக டில்ஷான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்

#pap#