PAK vs WI, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்
பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இஃப்திகார் அஹ்மத், சதாப் கானின் இறுதிநேர அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது.
இதில் இஃப்திகார் அஹ்மத் 32 ரன்களையும், சதாப் கான் 28 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓடன் ஸ்மித் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ப்ரூக்ஸ், பூரன், பாவல், ஸ்மித் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் பிராண்டன் கிங் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.
பின் பிராண்டன் கிங்கும் 67 ரன்களில் ஆட்டமிழக்க, போட்டி வெஸ்ட் இண்டீஸின் கையை விட்டு போனது. பின்னர் களமிறங்கிய வீரர்களும் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினர்.
இதனால் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 23 ரன்கள் தேவைப்பட்டது. அதனை எதிர்கொண்ட ரொமாரியா செஃபெர்ட் அந்த ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியை மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.