Sharjah போன்ற மெதுவான ஆடுகளத்தில் எப்படி ஆட வேண்டும் ?

ஆசியக் கோப்பையில் இன்று சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகள் மெதுவான ஆடுகளத்தைக் கொண்ட, அளவில் சிறிய சார்ஜா மைதானத்தில் மோதுகிறது!

மெதுவான ஆடுகளங்களில் ஆடுவதற்கு என்று ஒரு கோட்பாடு இருக்கிறது. 20 ஓவர் போட்டி என்றாலும் அந்தக் கோட்பாட்டின் படிதான் ஆட வேண்டும்.

மெதுவான ஆடுகளங்களில் புதிய பந்து பேட்டுக்கு அடிக்க வசதியாக ஒரு 6 ஓவர்கள் வரும். இந்த நேரத்தில் தாக்கி ஆட முயற்சி செய்யலாம். இதற்கடுத்து பந்து ஆடுகளத்தில் விழுந்து தாமதமாக எழுந்துதான் வரும். எனவே பந்தை வரவிட்டு ஆட வேண்டும்.

அடுத்து சார்ஜா ஆடுகளம் களிமண்ணால் ஆனது. இதனால் புதிய பந்தே நின்றுதான் வரும். இந்த நிலையில் பந்தை வரவிட்டும், மேலும் பேட்டை சுற்றாமல், நேராகவும் ஆட முயற்சி செய்ய வேண்டும். நேற்று ஹாங்காங்- பாகிஸ்தான் மோதிய போட்டியில், முதல் பாதி ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே களிமண் ஆடுகளம் என்பதால் பந்து நின்றே வந்தது. பந்தை வரவிட்டு ஆடாத காரணத்தால்தான் பாபர் முன்கூட்டியே ஆடி ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் 15 ஓவர்கள் வரை விக்கட்டுகளை சேமித்து இன்னிங்சை இழுத்துக்கொண்டு போகவேண்டும். இதற்கடுத்து கடைசி 5 ஓவர்களில் விக்கெட்டுகளை கைவசம் வைத்து தாக்கி ஆடிக் கொள்ளலாம். ஆனால் அப்பொழுதும் களத்தில் நின்ற ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து ஆட வேண்டும். கடந்த டி20 உலக கோப்பையில் இதே சார்ஜா மைதானத்தில் இலங்கைக்கு எதிராக ஜாஸ் பட்லர் மெதுவான ஆடுகளங்களில் எப்படி ஆட வேண்டும் என்று பாடமே நடத்தி ஒரு அட்டகாசமான சதம் அடித்திருப்பார்.

இன்று சார்ஜாவில் வழக்கமான அதே மெதுவான, களிமண் ஆடுகளம்தான் என்றால், இதை மிகச்சரியாக யார் கடைபிடிக்கிறார்களோ, இல்லை எதிரணியை விட கூடுதலாக யார் கடைபிடிக்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்!

Richards