#SLvBAN-பங்களதேஷ் மண்ணில் நம்பிக்கை கொடுத்தது இலங்கையின் இளம் அணி-முதல் போட்டியில் போராடி தோற்றது ..!

வங்கதேச கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் குசல் பெரேரா தலைமையிலான இலங்கையின் இளம் அணி பங்களாதேஷ் மண்ணில் அதீத நம்பிக்கையை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது.

புதிய தலைவருடன், புதிய அணியாக சிரேஷ்ட வீரர்கள் பலரை அணியில் இருந்து கழற்றி விட்டு, இளரத்தங்களுடன் விளையாடிய இலங்கை அணி இன்றைய போட்டியில் 33 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

ஆயினும் இன்றைய போட்ட இலங்கை அணி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருவாரியான நம்பிக்கையை கொடுத்திருக்கின்றமை சிறப்பம்சமாகும்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்பை தனதாக்கியது, அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து போராட்டத்திற்கு மத்தியில் 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

துடுப்பாட்டத்தில் ஐந்தாவது விக்கட்டில் முஷ்பிஹூர் ரஹீம் மற்றும் மஹ்மதுல்லா ஆகியோர் சத இணைப்பாட்டம் புரிந்தனர், இருவரும் அரைச் சதங்கள் பெற்றுக் கொண்டமையும் சிறப்பம்சமாகும்.

பதிலுக்கு 258 என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 33 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது, ஆரம்ப வீரர்களாக அணித்தலைவர் குசல் பெரேரா மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர்  களம் புகுந்தனர்.

மிகச்சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில் குணத்திலக்க 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார், ஆயினும் அதன் பின்னர் இலங்கை அணி 82 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள் எனும் நிலையில் இருந்ததாலும் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 102 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை இழந்தமையும் குறிப்பிடத்தக்கது .

இருந்தாலும் நம்பிக்கையை தளரவிடாத இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் ஹசரங்க மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 

இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்தாலும்கூட எந்த ஒரு கட்டத்திலும் தோல்வியை ஏற்கும் மனநிலையில் இன்றைய போட்டியை முகம் கொடுத்து இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9 ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடவந்த இசுரு உதானவுடன் சேர்ந்து வணிந்து ஹசரங்க பங்களதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தி இருந்ததையும் கவனிக்கத்தக்கது.

இறுதியில் போராட்டத்திற்கு மத்தியில் 33 ஓட்டங்களால் பங்களாதேஷ் முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.

ஆட்மட நாயகனாக முஷ்பிஹூர் ரஹீம் தேர்வானார் . அடுத்த போட்டி டாக்காவில் 25 ம் திகதி இடம்பெறவுள்ளது.