டி20 போட்டிகளில் எந்த வீரரும் செய்யாத மெகா சாதனை.. நமீபியா வீரரால் மிரண்ட ஓமன்
டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை எந்த பந்துவீச்சாளரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்து இருக்கிறார் நமீபியாவை சேர்ந்த ரூபன் டிரம்பிள்மேன். ஓமன் அணிக்கு எதிராக அவர் முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் இப்படி ஒரு சாதனையை எந்த வீரரும் செய்தது இல்லை.
2004 டி20 உலக கோப்பை தொடரில் ஓமன் அணிக்கு எதிராக நமீபியா அணி விளையாடியது. நமீபியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஓமன் முதலில் பேட்டிங் செய்தது. நமீபியா அணிக்காக ரூபன் டிரம்பிள்மேன் முதல் ஓவரை வீசினார்.
முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஓமன் அணியின் காஷ்யப் பிரஜாபதி மற்றும் ஆக்கிப் இலியாஸ் என இரண்டு பேட்ஸ்மேன்களை எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆக்கினார் ரூபன் டிரம்பிள்மேன். அவர்கள் இருவரும் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்கள். இது போல ஒரு பேட்ஸ்மேன் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் ஆட்டம் இழப்பதை கோல்டன் டக் அவுட் என்று கூறுவார்கள்.
இதுவரை 2633 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் போட்டியின் முதல் ஓவரிலேயே எதிரணியின் இரண்டு பேட்ஸ்மேன்களை கோல்டன் டக் அவுட் ஆக்கியது இல்லை. அந்த மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார் ரூபன் டிரம்பிள்மேன்.
இந்தப் போட்டியில் ஓமன் அணி ரன் எடுக்காமல் இரண்டு விக்கெட்களை இழந்த நிலையில் ரன் குவிக்கத் திணறியது. அந்த அணியின் காலித் கைல் 34, ஜீசன் மக்சூத் 22, ஆயான் கான் 15 ரன்கள் சேர்த்தனர். 19.4 ஓவர்களில் ஓமன் அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய ரூபன் டிரம்பிள்மேன் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். டேவிட் வீஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் இந்தப் போட்டி டை ஆனது. சூப்பர் ஓவரின் முடிவில் நமீபியா வெற்றி பெற்றது.