T20 உலக கிண்ணத்தை தவறவிடும் அபாய நிலையில் சுந்தர்..?

உலக கிண்ணத்தை தவறவிடும் அபாய நிலையில் சுந்தர்..?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சகலதுறை வீரரான வாஷிங்டன் சுந்தர் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) இரண்டாவது கட்டத்தையும் இழக்க நேரிடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டி ஆட்டத்தில் முகமட் சிராஜின் ஆபத்தான பந்து வீச்சில் சுந்தர் விரலில் உபாதை ஏற்பட்டது. காயம் குணமடைய ஐந்து வாரங்கள் ஆகும் என்று கூறப்பட்டது, ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, சுந்தர் குணமடைய அதிக காலம் தேவை என்றும் IPLன் இரண்டாவது கட்டத்தையும் இழக்க நேரிடும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுந்தர், இந்திய மற்றும் இங்கிலாந்தின் County Select XI அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டியில் இந்திய அணிக்கெதிராக County Select XI அணியை பிரதிநிதித்துவம் செய்து பங்கேற்றார்.

County Select XI அணியின் சில வீரர்கள் உபாதை மற்றும் கொரோனா தாக்கம் ஏற்பட, அந்த அணியில் வீரர்கள் பற்றாக்குறையை நிவர்த்திக்கவே County Select XI அணியில் விளையாட அவேஷ் கான் , சுந்தர் ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் போட்டியில் விளையாடிய இருவரும் (அவேஷ் கான் , சுந்தர்) உபாதைக்குள்ளானமை வருத்தத்துக்குரியது.

இதன்காரணத்தால் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ள IPL இரண்டாம் கட்டத்தை சுந்தர் தவறவிட்டால் அவரால் T20 உலக கிண்ணத்துக்கான இந்திய அணியில் தன்னை நிலைநிறுத்த முடியாது போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன் சுந்தர் IPL-ஐ தவறவிட்டால், விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (RCB) இது ஒரு பெரிய தலையிடியாக இருக்கும் என்றே கருதப்படுகின்றது, ஆர்.சி.பி முதல் பாதியில் ஏழு ஆட்டங்களில் ஐந்து வெற்றிகளுடன் ஒரு நல்ல நிலையில் புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள சுந்தர் , IPL போட்டிகளை தவறவிட்டு அதன்பின்னர் வரும் உலக T20 தொடரையும் தவறிவிடும் நிலைமை கவலைக்குரியதே.