T20 உலக கிண்ண போட்டிகள், மைதானங்கள் தொடர்பில் ICC யின் அதிரடி முடிவு …!

T20 உலக கிண்ண போட்டிகள், மைதானங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டது ICC …!

இந்தியாவில் காணப்படும் கொரோனா நிலைமை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் T20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை டுபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியம், ஷார்ஜா ஸ்டேடியம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானம் ஆகிய மூன்று மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்றில் இலங்கை, பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா ஆகியவை போட்டியிடும். அனைத்து தகுதி போட்டிகளும் ஓமனுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையில் பிரிக்கப்படும். இந்த அணிகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றிபெறும் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

“ஐ.சி.சி ஆண்கள் டி 20 உலகக் கிண்ணம் 2021 போட்டிகளை பாதுகாப்பாகவும், முழுமையாகவும் வழங்குவதே எங்கள் நோக்கம் ” என்று ஐ.சி.சி பிரதம நிறைவேற்று அதிகாரி ஜியோஃப் அலார்டிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

“இந்தியாவில் இந்த நிகழ்வை நடத்துவதில் நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு ஏமாற்றமடைந்துள்ள நிலையில், எப்படியாவது ஏதோவொரு நாட்டில் நிகழ்வை அரங்கேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்,

கிரிக்கெட்டின் அற்புதமான கொண்டாட்டத்தை ரசிகர்கள் அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக BCCI, எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை மற்றும் ஓமான் கிரிக்கெட் ஆகியவற்றுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவோம் என்றும் ஐ.சி.சி பிரதம நிறைவேற்று அதிகாரி ஜியோஃப் அலார்டிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

BCCI செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், இந்த நிகழ்வை எமது சொந்தநாட்டு ரசிகர்கள் முன்னிலையில் நடத்த BCCI சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது, ஆனால் நாட்டில் நிலவும் கொரோனா தொற்றுநோய் நிலைமையால் அனைவரின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது, அதனால்தான் இந்த போட்டிகளை மாற்றுவதற்கு நாம் முடிவெடுத்தோம் என தெரிவித்தார்.

எதுஎவ்வாறாயினும் இந்தப்போட்டி இடம்பெறும் நாடுகளும் மைதானமும் மாற்றப்பட்டாலும் உரிமம் இந்திய கிரிக்கெட் சபைக்கே உரித்தானது என்பதும் குறிப்பிடத்தக்கது.