நீல நிறத்தை குறைங்க.. மீண்டும் இந்திய அணி ஜெர்ஸியில் காவி.. டி20 உலக கோப்பையில் ஜெய் ஷா சாய்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜெர்சியில் நீல நிறம் குறைக்கப்பட்டு, காவி நிறம் அதிகரிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது.
நடப்பாண்டில் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ளது. ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடக்கவுள்ளது. டி20உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதவுள்ளன. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளது.
இதில் இந்திய அணி விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அனைத்து அமெரிக்காவிலேயே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்திலும், இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் மைதானத்திலும் நடத்தப்படவுள்ளது. அதேபோல் ஜூன் 12ஆம் தேதி இந்தியா – அமெரிக்கா அணிகள் விளையாடும் போட்டியும், ஜூன் 15ஆம் தேதி ஃபுளோரிடாவில் நடக்கும் போட்டியில் இந்தியா – கனடா அணிகளும் விளையாடவுள்ளது.
ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மாற்றம் செய்ய மே 25ஆம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த பின், 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 3 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
ஹெலிகாப்டர் மூலமாக அறிமுகம் செய்யப்பட்ட ஜெர்ஸி வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. இந்த ஜெர்ஸியில் வழக்கத்திற்கு மாறாக நீல நிறத்திற்கு பதிலாக காவி நிறம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்திய அணியின் டி20 ஜெர்ஸியில் காவி நிறமே இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக வெள்ளை நிறமே இருந்தது. தற்போது வெள்ளை நிறத்தை குறைத்து காவி நிறம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சி ஆடை முழுவதும் காவி நிறமாக மாற்றப்பட்டது.
அதுவே ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்தது. அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முழுமையாக காவி நிற ஜெர்ஸியில் இந்திய அணி களமிறங்கியது. இதற்கு பாஜகவே காரணம் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். தற்போதும் இந்திய அணி ஜெர்ஸியில் மீண்டும் காவி நிறம் அதிகரித்துள்ளதற்கு, பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷாவே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.