✍️ Thillaiyampalam Tharaneetharan
இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிது ஹசரங்க இழந்துள்ளார்.
காயம் காரணமாக அவர் 2024 ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அறிவித்துள்ளது.
அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வனிதுவுக்கு பதிலாக மற்றொரு வீரரை அணியில் சேர்க்கும் பணியில் ஈடுபடவுள்ளது.
வனிது ஹசரங்கவின் இடது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பூரண குணமடைய புனர்வாழ்வு மற்றும் ஓய்வில் காலத்தை செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில நாட்களுக்கு முன்பு வனிது மேலும் மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக துபாய் சென்றிருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவ ஆலோசனை பெறப்பட்ட நிலையில், மூன்று நாட்களாக அங்கேயே தங்கியுள்ளார்.
இவர் இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவராகவும் உள்ளமையால் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தயார்படுத்துவதே இலங்கை கிரிக்கட் நிறுவனத்தினதும் வனிது ஹசரங்கவின் பிரதான இலக்கு என்பது இரகசியமல்ல.
மே 26 ஆம் தேதி ஐபிஎல் முடிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.