WPL- நேரா பைனலுக்கு போகலாம்னு பார்த்தீங்களா.. மும்பை இந்தியன்ஸ் சோலியை முடித்த ஆர்சிபி
2024 மகளிர் ஐபிஎல் தொடர் அதன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. லீக் சுற்றில் கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமாக விளையாடி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அதனால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வியால் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
மகளிர் ஐபிஎல் தொடரில் 5 அணிகள் விளையாடுகின்றன. இதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
மகளிர் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் ஒரே ஒரு போட்டி மட்டுமே நடத்தப்படும், அதாவது எலிமினேட்டர் மட்டுமே நடத்தப்படும். எனவே, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பெறுவது மிகப்பெரிய சாதக அம்சம். தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மகளிர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபாரமாக விளையாடினார். அவர் 37 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார்.
துவக்க வீராங்கனை மேக்னா 13 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து அதிரடி காட்டினார். எல்லிஸ் பெரி 38 பந்துகளில் 49 ரன்களும், ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 36 ரன்களும், ஜார்ஜியா வேர்ஹாம் அதிரடியாக ஆடி பத்து பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இதை அடுத்து ஆர்சிபி அணி 199 ரன்கள் சேர்த்தது.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு 200 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. மும்பை அணியில் நாட் சைவர்-பிரண்ட் அபாரமாக ஆடினார். அவர் 35 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். அவருக்கு அடுத்து அதிகபட்சமாக சஜீவன் சஜனா 12 பந்துகளில் 23 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்து இருந்தது. சிறப்பாக பந்து வீசிய ஆர்சிபி அணியின் ஸ்னே ராணா மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். எல்லிஸ் பெர்ரி மற்றும் கிம் கார்த் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.