விசாகப்பட்டினம் டெஸ்டில் இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தியதுடன் இரண்டாவது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம், 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையிலும் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது. மூன்று அணிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இதன் மூலம் அந்த அணியும் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு மிக அருகில் சென்றுள்ளது. விசாகப்பட்டினம் டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவின் புள்ளி சதவீதம் 52.77 ஆகவும், ஆஸ்திரேலியாவின் சதவீதம் 55.00 ஆகவும் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 புள்ளிகளின் முதல் 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.
ஐந்து அணிகளுக்கு இடையே புள்ளி சதவீதத்தில் 5 சதவீத வித்தியாசம் மட்டுமே உள்ளது. இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை பின்னுக்குத் தள்ளியது இந்தியா.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்த பிறகு இந்தியா சில காலம் முதலிடத்தில் இருந்தது, ஆனால் பாகிஸ்தானை தோற்கடித்து ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்தது.
இதன்பின், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.