புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது டெல்லி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் இறுதி இடத்துக்கு தள்ளப்பட்டது..!

புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது டெல்லி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் இறுதி இடத்துக்கு தள்ளப்பட்டது..!

ஐபிஎல் போட்டி தொடரில் 33வது போட்டி சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது. வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ,பான்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக் கொண்டது.

 தலைமைத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டு, அணியிலிருந்தும் ஒரு சில போட்டிகளில் நீக்கப்பட்டிருந்த டேவிட் வோர்னர், இன்று பெயர்ஸ்டோ இல்லாத காரணத்தால் ஆரம்ப வீரராக அணிக்கு திரும்பினார்.

நோக்கியாவினுடைய பந்து வீச்சில் டக் அவுட் முறை மூலமாக டேவிட் வோனர் ஆட்டமிழக்க, தடுமாற்றத்தை சந்தித்த சன் ரைசர்ஸ் போராட்டத்துக்கு மத்தியில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென் ஆப்பிரிக்கர்கள் ரபாடா மற்றும் அண்ட்ரிச் நோக்கியா ஆகியோர் ஓர் அற்புதமான பங்களிப்பை பந்துவீச்சில் நல்கினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆரம்ப வீரர் ஷிகர் தவான் மிகச்சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார், ஷிகார் தவானின் 42 ஓட்டங்களும், அணித் தலைவர் பான்ட் (35*) முன்னாள் அணித்தலைவர் ஷிரேயாஸ் ஐயர் (47*) ஒருங்கிணைந்து மிகச் சிறந்த இணைப்பாட்டத்தையும் பெற்றுக் கொடுக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் டெல்லி வெற்றி பெற்றது.

13 பந்துகளில் மீதமிருக்க இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலமாக டெல்லி கேப்பிடல்ஸ், ஐபிஎல் போட்டி தொடரின் புள்ளி பட்டியலில் 7 வெற்றிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது,

அதே நேரத்தில் 7 தோல்விகளுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதி இடத்திற்கு பின்தள்ளப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான மற்றும் ஒரு போட்டி இடம்பெறவுள்ளது.