அரசியலுக்கு வருகிறாரா சவுரவ் கங்குலி – பிறந்த நாளன்று நிகழ்ந்த ஆச்சரியம்…!
இந்திய கிரிக்கெட் சபையின் தற்போதைய தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
நேற்றைய நாளில் தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாடிய கங்குலிக்கு ஏராளமான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீரென கங்குலி வீட்டிற்கு சென்று அவருக்கு மலர்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது மாத்திரமல்லாமல் முதன்முறையாக மம்தா பானர்ஜி கொலகத்தாவில் உள்ள கங்குலி இல்லத்திற்கு சென்று நீண்ட நேரம் அவருடைய குடும்பத்தாரோடு உறவாடியது மாத்திரமல்லாமல் சவுரவ் கங்குலியினுடைய தேக ஆரோக்கியம் குறித்தும் கலந்துரையாடியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே மம்தா பானர்ஜியுடன் இணைந்து கங்குலி மேற்கு வங்க மாநிலத்தில் அரசியலில் குதிக்கவுள்ளார் என செய்திகள் வெளிவந்திருந்தாலும், அதனை கங்குலி மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் இன்றைய திடீர் விஜயம் கங்குலியை அரசியலுக்குள் வளைத்துப் போடும் ஒரு முனைப்பாக இருக்கலாம் என்று கங்குலி ரசிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.