யாழ் மண்ணில் புற்தரை (Turf ) ஆடுகளம், வடக்கின் கிரிக்கட் பயணத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பம்..!

யாழ் மண்ணில் புற்தரை (Turf ) ஆடுகளம், வடக்கின் கிரிக்கட் பயணத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பம்..!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சிய ( OBA UK ) கிளையின் ஆதரவில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் கல்லூரிச் சமூகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு பயிற்சிக்காக இரு புற்தரை (Turf) கடினப்பந்து திடல்களும், ஒரு பாய்விரிப்புத் திடலும் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

 

இதன் பிரமாண்டத் திறப்பு விழா இன்றும் (12ம் திகதி), நாளையும் (13ம் திகதி) நடைபெறவுள்ளது.

திறப்புவிழாவின் விசேட நிகழ்வாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணியுடனும், யாழ்ப்பாண பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட வீரர்கள் அணியுடனும் மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர்கள் கொண்ட போட்டியில் கொழும்பிலிருந்து வருகை தரும் கொழும்பு ரோயல் கல்லூரி அணி கலந்துகொள்ள உள்ளது.

டிசம்பரில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) 2வது பதிப்பில் பங்கேற்கும் Jaffna Kings அணியின் பணிப்பாளர் கணேசன் வாகீசனின் (Harry) ஆத்மார்த்தமான முயற்சியினால் ரோயல் கல்லூரி கிரிக்கெட் அணியின் யாழ்ப்பாணத்திற்கான சுற்றுப்பயணம் சாத்தியமாகியுள்ளது .

Lyca குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான பிரபல தொழிலதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்கள் Jaffna Kings அணியின் உரிமையாளர் என்பது அணியின் வீரர்களுக்கும் அணிசார்ந்த செயற்பாடுகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கிரிக்கெட் ஆடும் வீரர்கள் இடையே பெரும் குறையாக இருந்த ஒரு விடயம் இன்றைய நாளில் தீர்வாகின்றது, பாய் விரிப்பு ஆடுகளங்களில் விளையாடுவது சர்வதேச கிரிக்கெட் தரத்திற்கு ஒப்பானதாக இருக்காது என்றும், அது தேசிய கிரிக்கட் கட்டமைப்பிற்கு ஏற்புடையதாக இருக்காது என்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் யாழ் மண்ணில், அதுவும் வட மாகாணத்தில், யாழ் இந்துக் கல்லூரியில் இவ்வாறு தென்னிலங்கை ஆடுகளங்களுக்கு ஒப்பான புற்தரை ஆடுகளம் (Turf) அமைக்கப்படுகின்றமை இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் சமூகத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.

இதைவிடவும் கொழும்பில் பிரபலமான பாடசாலையான ரோயல் கல்லூரி அணியுடனான போட்டியில், யாழ் மாவட்ட அணி பங்கெடுக்கச் செய்யும் இந்த வாய்ப்பானது மிகப்பெரிய கிரிக்கெட் வளர்ச்சிக்குரிய சம்பவமாகவும் கருதப்படுகிறது.

இதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த ஜப்னா கிங்ஸ் அணியினுடைய பணிப்பாளர் வாகீசன் போற்றுதலுக்குரியவர் எனலாம்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக ஆடிவரும் குசல் ஜனித் பெரேரா, பானுக ராஜபக்ச, சாமிக்க கருணாரத்ன, லசித் எம்புல்தெனிய போன்ற பல பிரபல கிரிக்கெட் வீரர்கள் ரோயல் கல்லூரியின் முன்னாள் வீரர்கள் என்பதும் சிறப்பம்சம்.

#சுந்தரலிங்கம் முகுந்தன்