#INDvAUS இந்தியாவின் சொதப்பல்…!

இன்று தன் அணி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் போது உள்ளே வந்த விராட் கோலி, நங்கூரம் போட்டு ஆட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய விராட் கோலி, வழக்கம்போல அவுட்சைட் ஆஃப் சென்ற பந்தை விரட்டிப் போய் எட்ஜ் கொடுத்து அவுட் ஆகி இந்தியாவை 33-3 என்ற நிலைக்கு தள்ளியதை பார்த்த போது இரண்டு விஷயங்கள் தோன்றின.

1. ‘வேற மாதிரியாச்சும் அவுட் ஆகித் தொலையேன்டா’ என்று கோலியை வைத்து வந்த சூனாபானா வடிவேல் மீம்.

2. Virat Kohli is no more a big fish.

அவர் விக்கெட் விழும்போதெல்லாம் Starc got the big fish, Cummins got the big fish என்று கமெண்ட்ரியில் சொல்வார்கள். ஆனால் Big Fish என்பது அத்தனை எளிதாக எந்த தூண்டில்களிலும் மாட்டாமல் அசால்ட்டாக தப்பிச் சென்று தூண்டில்காரனுக்கு ஆட்டம் காட்டும் மீன் அல்லவா? ஆனால் கோலி பல வருடங்களாக, திட்டமிட்டு போடப்படும் ஒரே ஒரு தூண்டிலில் மிக எளிதாக மாட்டிக் கொண்டு வருகிறார். பின் எப்படி அவர் பிக் ஃபிஷ்?
சுரேசு பன்னம்பாறை

அமேசானில் ‘The Test’ என்றொரு டாக்குமென்ட்ரி இருக்கிறது. 2018ல் நடந்த Sandpaper Scandal க்கு பிறகு ஆஸ்திரேலிய அணி தன்னை மறுகட்டமைப்பு செய்ததைப் பற்றியது. அதன் முதல் சீசனில், இந்தியா இக்கட்டான சூழலில் இருக்கும்போது விராட் கோலி உள்ளே வருவார். ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றி, மேட்ச்சை இந்தியா பக்கம் கொண்டு வந்து வென்று தருவார். அவர் உள்ளே வரும்போது, ஆட ஆட, ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் ஆஸ்திரேலிய கோச் ஜஸ்டின் லாங்கர் பதட்டத்துடன், ரெஸ்ட்லெஸ்ஸாக தலையைப் பிடித்துக் கொண்டு செய்வதறியாது சுற்றுவார். பின் தன் அணியிடம் ‘இந்தத் தலைமுறையின் மகத்தான பேட்ஸ்மேன் ஆடுகிறான். அவன் ஆடுவதைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்வார். சிலிர்ப்பாக இருக்கும். அந்த விராட் கோலிதான் பிக் ஃபிஷ்.
Suresh Sudalaimani

மேலும் Fab 4 என்றழைக்கப்படும் நால்வரில் கோலியைத் தவிர மற்ற மூவரும் சமீப வருடங்களில் தன் அணியை இக்கட்டில் இருந்து மீட்டெடுக்கும் Match winning ஆட்டத்தை ஆடியிருக்கின்றனர். பேய்க்காற்றிலும் நங்கூரமாய் நிலைத்து நின்று 100, 200 என அடித்து அணியை காப்பாற்றி வெற்றி பெற வைத்திருக்கின்றனர். இவர்கள் தான் பிக் ஃபிஷ். கோலி அல்ல.

சில மோசமான ஆட்டங்கள் ஆடினால் உடனே ‘அவன ரிட்டயர்ட் ஆகச்சொல்லு’ என்ற கோஷங்கள் எழுவது இயல்புதான். அந்தளவு அதீதமான முடிவுகளில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் தொடர்ந்த மோசமான ஆட்டங்களுக்குப் பிறகும் ரோஹித் ஷர்மாவும், கோலியும் அணியில் தொடர்வது மிகமிக மோசமான முன்னுதாரணம். ஆஸ்திரேலியாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் இதுவும் ஒன்று. ரஹானேவுக்கும் புஜாராவுக்கும் கிடைக்காத சலுகையல்லவா இது? அணியில் ஒரு வீரரின் இடம் நிரந்தரத்தன்மை பெற்றுவிட்டால் அது அவரது போராடும் குணத்தை நிச்சயம் பதம் பார்க்கும்.

என்னளவில் போன இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் கவாஸ்கரிடம் ‘ஸ்டுபிட் ஸ்டுபிட் ஸ்டுபிட்’ என்று திட்டுவாங்கிய அந்த கிறுக்குத்தனமான ஷாட்டுக்கும் இந்த இன்னிங்ஸில் ஆடிய ஷாட்டுக்கு எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. ப்ரஷர் மொத்தமும் ஆஸ்திரேலியா பக்கம் இருக்கும்போது, ஒரு பார்ட் டைம் ஸ்பின்னர் போட்ட சுமாரான பந்தில், ஆன் சைடில் இருக்கும் ஒரே ஒரு ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி தன் விக்கெட்டை பரிசளித்து, அத்தனை மணி நேரம் இறுக மூடிக்கிடந்த அத்தனை கதவுகளையும் திறந்து விடுவதும் Stupidity தான்.

இன்னொரு முட்டாள்தனம் ஜெய்ஸ்வால் செய்தது. வெற்றிக்காக ஆடவில்லை, ட்ராவுக்காக தான் ஆடுகிறோம் என்பது முடிவாகிவிட்டது. அந்நிலையில் அப்படியொரு பவுன்சரை அடிக்கப் போய் மொத்த மேட்ச்சையே காவு கொடுப்பது கொஞ்சம் கூட கேம் அவேர்னெஸ் இல்லாத முட்டாள்தனம்.

இன்னொன்று வாஷிங்டன் சுந்தர் செய்தது. கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க எல்லா வாய்ப்புகளும் இருந்தும் டிஃபன்ஸ் வைத்து, கட்டக்கடைசி பேட்ஸ்மென்னுக்கு அடுத்த ஓவர் ஸ்ட்ரைக்கை கொடுத்து, பவுலர்களிடம் அவர்களின் விக்கெட்டை தாரை வார்ப்பது. அதுவும் ஒரு ஓவரின் ஐந்தாவது பந்தை சிராஜ் அடிக்க, அதற்கு சிங்கிள் ஓடி, ஆறாவது பந்தில் டொக் வைத்து, அடுத்த ஓவரை சிராஜுக்கு கொடுத்தபோது ‘சபாஷ்டா’ என்று சொல்லத் தோன்றியது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிராஜ் காலி.

ஆனால் இந்த தோல்விக்கு இந்தியாவின் அத்தனை தவறுகளுக்கும் எத்தனை பொறுப்பிருக்கிறதோ அதைவிட ஆஸ்திரேலியாவின் பொறுமை, ஆக்ரோஷம், திட்டமிடல், கேப்டன்ஸிக்கும் பொறுப்பிருக்கிறது. Truly they are a champion side. இந்த படத்தைப் பாருங்கள். இது வாஷிங்டன் சுந்தருக்கு வைக்கப்பட்ட ஃபீல்டிங் செட்டப். அவரைச் சுற்றி மட்டும் எட்டு பேர். டாப் ஆங்கிளில் பார்த்தால் பிட்ச்சைத் தவிர அவரை வட்டமாக சூழ்ந்திருக்கிறார்கள். கீப்பருடன் சேர்த்தால் ஒன்பது பேர். பவுலர் மற்றும் பும்ராவிற்கு பக்கத்தில் நிற்கும் ஃபீல்டரையும் சேர்த்தால் மொத்த அணியும் இந்த படத்திற்குள் தான் நிற்கிறது. இத்தனைக்கும் வாஷிங்டன் சென்ற இன்னிங்ஸில் அட்டகாசமாய் ஆடி 50 அடித்த வீரர். சென்ற இன்னிங்ஸில் சதமடித்த நிதிஷ்குமார் வந்தபோதும் அவரைச்சுற்றியும் நான்கைந்து பேரை நிற்கவைத்தார் கம்மின்ஸ். இதுதானே வெற்றிக்கான வேட்கை?

ஆனால் ஆஸ்திரேலியாவின் கடைசி இரண்டு பேட்ஸ்மென்கள் ஆட வரும்போது கூட ரோஹித் இதில் பாதியளவிற்கான அட்டாக்கிங் செட்டப்பை கூட கொண்டு வரவில்லை. எந்த ப்ரஷரும் இல்லாமல் அவர்கள் நின்று நூற்றுக்கும் மேற்பட்ட பந்துகள் ஆடி 50க்கு மேல் பார்ட்னர்ஷிப் போட்டு மேட்ச்சை இந்தியா கையில் இருந்து பறித்துச் சென்றுவிட்டனர்.

அதேபோல் தொடர்ந்து ஸ்டார்க்கின் இரண்டு ஓவர்களில் ரன் லீக் ஆனால், கம்மின்ஸ் உடனே ஸ்டார்க்கை நிறுத்திவிட்டு, வேறு பவுலரை களம் இறக்குகிறார். ஆனால் சிராஜ் ரன்களை வாரிக்கொடுத்தால் கூட, புதிய பந்தெடுக்கும்போது அதை ஆகாஷ் தீப்பிற்கு கொடுக்காமல் சிராஜை கட்டிக் கொண்டு அழுததை பார்த்தோம். இப்படி அடிப்படை அணுகுமுறையில் இருந்தே ஆஸ்திரேலியா இந்த வெற்றிக்கான எல்லா பிரயத்தனங்களையும் செய்து வென்றுள்ளது. இந்தியா தவறுகளில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளாமல் கையிலிருந்த போட்டியை நழுவ விட்டுள்ளது.

இந்த தோல்விக்காக வருத்தப்பட ஒன்றுமில்லை. India doesn’t deserve to win this match. And they don’t deserve a spot in the WTC final. ஆனால் இந்த தோல்வியில் இருந்தும் கற்றுக்கொள்ளாமல், கோலி, ரோஹித், சிராஜ், பண்ட் குறித்த அத்தியாவசியமான முடிவுகளை எடுக்காமல் மீண்டும் பழைய டேட்டாக்களை வைத்துக் கொண்டு இந்தியா புதிய கணக்குகளை போடுமானால், நாம் வருந்தவேண்டியது அதற்குத்தான்.

மீள் பதிவு ….

Previous articleஇந்தியாவுக்கெதராக அதிக டெஸ்ட் சதங்கள்
Next articleரோஹித் விலகி or விலக்கப்பட்டு பும்ரா நாளை கேப்டனாகக் களம் காணுகிறார்.