ரிஷப் பண்ட்டை உள்ளே வைக்க முடியாத அணியில், left-hand பேட்ஸ்மேன் மற்றும் left-hand ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் பவுலரான ரவீந்திர ஜடேஜா காயமடைந்து ஆசியக் கோப்பை தொடரை விட்டும், வருகின்ற டி20 உலகக் கோப்பையை விட்டும் வெளியேறி இருப்பது, அடுத்து இந்திய அணி மோதவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு ப்ளேயிங் லெவனில் எப்படியான மாற்றங்களை எல்லாம் தேவையாக்குகிறது ?
ரவீந்திர ஜடேஜாவை ஒரு பேட்ஸ்மேன் என்ற அளவில் வைத்துப் பார்க்கும் பொழுது, அவருக்குப் பதிலாக தற்போது வந்திருக்கும் அக்சர் படேல் கொஞ்சம் நம்பிக்கை குறைவாகத் தருபவர்தான். இதனால் பாகிஸ்தான் அணி ஒரு லெக் ஸ்பின்னர், ஒரு லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னரை வைத்து ஆடும் பொழுது, அதைத் தாக்கி ஆடி ரன் கொண்டுவர, ஒரு left-hand பேட்ஸ்மேன் தேவையை உருவாக்குகிறது. இதனால் தினேஷ் கார்த்திக் வெளியே போய் ரிஷப் பண்ட் உள்ளே வரும் சூழல் பிறக்கிறது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலம் டாப் ஆர்டரில் மூன்று பேட்ஸ்மேன்களிடம்தான் இருக்கிறது. இதில் 2 பேர் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன். இவர்களை சீக்கிரத்தில் வீழ்த்துவதுதான் இந்திய அணியின் பிரதான திட்டமாக இருக்கும். இவர்கள் இருவரும் பவர் பிளேவில் தப்பித்தால், மிடில் ஓவர்களில் இவர்களைக் கட்டுப்படுத்த, லெக் ஸ்பின்னர் , மற்றும் left-hand ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் தேவைப்படுகிறார். இதனால் அக்சர் படேலின் தேவையும் உருவாகிறது.
அடுத்து பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை அமைப்பு முறையில், துவக்க விக்கெட் சீக்கிரத்தில் விழவில்லை என்றால் அதற்கடுத்து வரும் இரண்டு பேட்ஸ்மேன்கள் லெப்ட் ஹேன்ட் பேட்ஸ்மேன்கள், இப்படி ஒரு நிலை உருவானால், அணியில் இருக்கும் லெக் ஸ்பின்னர் நல்ல வேகமான கூக்ளி வீசக் கூடியவராக இருக்க வேண்டும். இதற்கு சாஹலை விட ரவி பிஷ்னோய் சிறப்பானவர். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு வெளியே திருப்பும் அக்சர் படேல், அதிக டெலிவரிகள் வேகமான கூக்ளிகளால் உள்ளே திருப்பும் ரவி பிஷ்னோய். இப்படியான எதிர்க்கலவை அணியில் அவசியம். களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு தகுந்தாற்போல் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த கேப்டனுக்கு எளிதாக இருக்கும்.

ரவீந்திர ஜடேஜா – அக்சர் படேல்
ரிஷப் பண்ட் – தினேஷ் கார்த்திக்
சாகல் – ரவி பிஷ்னோய்
ஆவேஸ் கான் – தீபக் ஹூடா
இப்படி ஹர்திக் பாண்டியாவோடு 3 வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், ஒரு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் என ஆறு பந்துவீச்சாளர்கள், புவனேஸ்வர் குமாரோடு பேட்டிங் டெப்த் நம்பர் 9 வரை இருக்கும். இதே அணியில் ரவிக்குப் பதிலாக சாகலோ அல்லது தீபக் இடத்தில் அஸ்வினோ வரலாம்.
ஆனால் நான் மேலே சொல்லியிருக்கும் படி அமையும் அணி, விக்கெட்டை பற்றிக் கவலைப்படாமல் எதிரணியை தாக்கி ஆடுவதற்கு வசதியான அணி. அதே சமயத்தில் எதிரணியும் நம்மை தாக்கலாம். இந்த ஆபத்தை கொஞ்சம் குறைக்க வேண்டுமென்றால், தீபக்கிற்கு பதில் முழுநேர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை வைத்துக்கொள்ளலாம். அஸ்வின் இருந்தால் சாஹலும் இருக்கலாம்.
ரவி பிஷ்னோய் வீசும் கூக்ளிகள் அஸ்வின் இருக்கும்போது தேவைப்படாது. இதனால் அஸ்வினுக்கு எதிர் பந்து வீச்சு முறையான லெக் ஸ்பின்னர் சாஹல் இருக்கலாம்.
ஆடுகளம் கண்முன்னால் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று இருந்தால், ஆவேஸ் கானே அணியில் தொடருவார். பாகிஸ்தான் அணியும் சுழற்பந்துவீச்சாளர் நவாஸை வெளியில் வைத்து, ஹசன் அலியோடு நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னர் என களம் இறங்கலாம். ஆனால் ஆடுகளம் சாதாரணமாக இருந்தால், தாராளமாக ஆவேஸ் கானை வெளியில் வைத்து, தீபக் ஹூடா இல்லை அஸ்வினை கொண்டு வரலாம்!

இது இல்லாமல் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரையும் உள்ளே வைத்து கேஎல்.ராகுலை வெளியே வைத்து, சூரியகுமாரை ஓபனிங் அனுப்பும் ஒரு பிளேயிங் லெவனும் இருக்கிறது. அடுத்து ஆஸ்திரேலியா சவுத் ஆப்பிரிக்கா டி20 தொடர்களில் கேஎல் ராகுலை முழுமையாக ஆடவைக்கும் முடிவுக்கும் போகலாம். ஆனால் இதற்கான வாய்ப்புகள் குறைவு!
ரவீந்திர ஜடேஜாவின் காயமும், ஆவேஸ் கானின் சரியற்ற பௌலிங் பார்மும் இவ்வளவு தேவைகளையும் அதையொட்டிய சிந்தனைகளையும் உருவாக்குகிறது. மேலும் சூப்பர் 4 சுற்றில் முதல் போட்டியே பெரிய அணியான பாகிஸ்தான் அணியுடன் எனும்போது மாற்றங்களைப் பற்றி இவ்வளவு தூரம் சிந்திப்பதும் செயல்படுத்துவதும் அவசியமாகிறது. இந்தப்போட்டியில் தோற்கும் பட்சத்தில், அது அடுத்தடுத்த போட்டிகளில் அதிக நெருக்கடிகளைக் கொண்டு வரும்.
உருவாகும் சூழல்கள் புதிய திட்டங்களை உருவாக்குகிறது. கடந்த வாரம் ஆடும் அணியில் இடமில்லாத ரிஷப் பண்ட்க்கு, இந்த வாரம் ரவீந்திர ஜடேஜாவின் காயம் இடத்தை உருவாக்குகிறது!
இந்திய அணி ஆடும் ஆட்டத்தை விட, ஆடும் அணி எப்படி அமைகிறது என்பதுதான் தற்போதெல்லாம் சுவராசியமான ஒன்றாக இருக்கிறது!
Richards

எமது YouTube தளத்துக்கு செல்ல ?






